வவுனியாவில் கொடூரம்..! பணமே எமனான சோகம்..! அம்பலமாகும் உண்மைகள்
கடந்த 11ஆம் திகதி வவுனியா தேக்கவத்தை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பிள்ளைகளின் தந்தையான பாலநிசாந்தன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர் யார்..? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்..? குறித்த கொலையினை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் உள்ளிட்ட விடயங்கள் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாலநிசாந்தன் திருமணமாகி நிலையில், குடும்ப தகராறு காரணமாக சில மாதங்களா தனது குழந்தையுடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
மேசன் தொழில் செய்து வரும் பாலநிசாந்தன் குடி பழக்கமுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பாலநிசாந்தன் சிறுவயதாக இருக்கும் போதே அவரின் தாயார் வெளிநாடு சென்று விட்டார்.
இதன் காரணமாக சிறிய தாயின் அரவணைப்பில் இருந்து அவருக்கு கோபமும், பிடிவாத குணமும் அதிகமாகவே இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் தாயார் பாலநிசாந்தனுக்கு செலவுக்கு பணம் அனுப்பி வரும் நிலையில், அவர் படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு 75 ஆயிரம் ரூபா பணம் அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வழமைப்போல் வேலைக்கு சென்று வரும் பாலநிசாந்தன், கடந்த சில நாட்களாக அறிமுகம் இல்லாத நடுத்தர வயதுடைய ஒருவருடன் பழகி வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, சம்பவ தினத்தன்று அதிக மது போதையில் பாலநிசாந்தன் தள்ளாடியப்படி, அந்த புதிய நபருடன் பாலநிசாந்தன் வீடு வந்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த பெண் ஒருவர் அந்த ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில், படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரே பாலநிசாந்தனை வீட்டுக்குள் அழைத்து சென்று படுக்க வைத்துள்ளார்.
பின்னர் பாலநிசாந்தனை சாப்பிட அழைத்த போது நிசாந்தன் தூங்குவதாக அந்த சந்தேகநபரே பதில் அளித்துள்ளார். எனினும், குறித்த நபர் அந்த இடத்தை விட்டு தப்பி செல்லவே அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், பாலநிசாந்தனின் தாயார் அனுப்பிய பணம் மற்றும் அவரது கையடக்க தொலைபேசி ஆகியன காணாமல் போயுள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாலநிசாந்தனின் சகோதரன் கருத்து தெரிவிக்கையில், எனது சகோதரனின் மரணத்தில் மர்மம் இருக்கின்றது. இக்கொலையானது திட்டமிட்ட வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணத்துக்காக கொலை நடைபெற்றிருந்தாலும் இது ஒரு திட்டமிட்ட கொலை இக்கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார்.
இதேவேளை, பாலநிசாந்தனை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் சந்தேகநபரைத்தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். சந்தேகநபர் கண்டி பிரதேசத்திற்கு தப்பித்து சென்றிருப்பதாக தெரிக்கப்படுகின்றது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.