கிளிநொச்சியில் கனரக வாகனங்கள் விபத்து! இருவர் காயம்

கண்டாவளை – வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டதில் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் 04.07.2017 இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும், முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ரக வாகனமும் வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளரும், லொறி ரக வாகனத்தின் சாரதியுமே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், வாகனங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்த காரணத்தால் வீதியில் இருந்து அவற்றினை அகற்றப்படாமையால் ஏ 32 முல்லை வீதியின் போக்குவரத்து தடையேற்பட்டது.

இந்த வாகனங்களை அகற்றுவதற்கு பாரம்தூக்கி அல்லது யே.சி.பி ரக வாகனம் தேவைப்படுவதால் சில வேளைகளில் தொடர்ந்தும் ஏ 32 முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படலாம் என சந்தேகிக்கப்படுகின்றதாக தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like