கிளிநொச்சியில் மேலதிக சிறுபோக விதைப்புக்களை சீர் செய்வதற்கு நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் பிரதேசத்தின் கீழான சிறுபோகச் செய்கையில் மேலதிக விதைப்புக்களை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வருகின்றது.

இந்நிலையில் மேலதிக விதைப்புக்களை கட்டுப்படுத்தி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையினை பாதுகாக்க வேண்டிய அவசர நிலை காணப்படுகின்றது.

அக்கராயன்குளத்தின் கீழ் 1150 ஏக்கர் தீர்மானிக்கப்பட்டது. இதில் நான்கு கமக்கார அமைப்புக்கள் உள்ளடங்குகின்றன.

இவற்றில் மேலதிக விதைப்புக்கள் காணப்படுகின்றன மேற்படி 1150 ஏக்கருக்கும், 47 நாட்களுக்கு நீர் விநியோகம் மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.

ஆனால் மேலதிக விதைப்புக்களால் பாரிய நீர்த்தட்டுப்பாடு ஒன்று ஏற்படும். மேலதிகமாக சிலர் வேண்டுமென்றே பயிர் செய்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்படாத காணிகள் பலவற்றில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது காணிகள் அளவீடு செய்யப்பட்டு, சீர் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக விதைப்புக்கள் குறித்து மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் எதுவும் யாரையும் புண்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவில்லை.

இவற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் இதன் மூலம் பாதிக்கப்படுவது மிகப்பெரிய சமூகம். எனவே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like