10 வருடங்கள் சிறையிலிருந்த கிளிநொச்சி நபர் விடுதலை

2007ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட இராமநாதன் மீது சட்டமா அதிபரினால் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தனித்தனியாக மூன்று வழக்குகள் சட்டமா அதிபரினால் கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் புகையிரதத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியமை, இராணுவத்தின் உயரதிகாரியின் நடவடிக்கைகளை வேவு பார்த்து புலித்தலைமையகத்திற்கு தகவல் வழங்கியமை மற்றும் கடும்சேதம் விளைவிக்க கூடிய குண்டுகளை உடமையில் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்குகள் முக்கிய சான்றாக எதிரியினால் சுயவிருப்பில் பொலிசாருக்கு வழங்கப்பட்டதாக அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாகப் வழங்கப்பட்டதா என்பதனை உறுதிப்படுத்த உண்மை விளம்பல் விசாரணை நடைபெற்றது.

இதன்போது அரச தரப்பில் சாட்சியமளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மொழி பெயர்ப்பாளர், தட்டெழுத்தாளர் ஆகியோர் வழங்கிய சாட்சியங்களில் பல முரண்பாடுகள் காணப்படுவதை குறுக்கு விசாரணையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

எதிரியின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா மேலும் தனது வாதத்தில்,

எதிரியை 2007ம் ஆண்டு புறக்கோட்டை பொலிசார் கைது செய்து கடுமையாக தாக்கி பின்னர் இரகசிய பொலிசாரிடம் எதிரியை ஒப்படைத்துள்ளனர். விசாரணையின் போது கடும் தாக்குதலை மேற்கொண்ட இரகசிய பொலிசார் மேலதிக விசாரணைக்ககாக பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிசார் எதிரியை கடுமையாக தாக்கி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

அரச தரப்பு சாட்சியான சட்ட மருத்துவர் குறுக்கு விசாரணையில் பொலிசாரின் சித்திரவதையினால் எதிரிக்கு ஒன்பது காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சாட்சியம் அளித்துள்ளார். மேலும், குற்ற ஒப்புதல் வாக்குமூலம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறுக்கு விசாரணையில் எதிரி தரப்பால் நிரூபிக்கப்பட்டது.

இதனையடுத்து கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க தனது தீர்ப்பில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் எதிரியிடமிருந்து சுயமாக பெறப்படவில்லையென தெரிவித்ததுடன், எதிரிக்கு எதிராக வேறு சான்றுகளை இல்லையென அரச சட்டத்தரணி நீதிமன்றிற்கு தெரிவித்ததையடுத்து நீதிபதி எதிரியை மூன்று வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்தார்.

அரச தரப்பில் அரச சட்டத்தரணி விராஜ் வீரசூரியவும் எதிரி தரப்பில் சட்டத்தரணிகளான தர்மஜா தம்பிராசா, அனோமா பிரியதர்சினியுடன் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவும் ஆஜராகியிருந்தார்.

You might also like