கிளிநொச்சி மாவட்டத்தில் 23,106 குடும்பங்களைச் சேர்ந்த 80,973 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில், வரட்சி காரணமாக, 23,106 குடும்பங்களைச் சேர்ந்த 80,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்றைய நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக, பாரிய நீர்ப்பாசனக் குளங்கள், சிறிய நீர்ப்பாசனக் குளங்கள், சிறு கடல் பகுதிகளில் நீர் வற்றியதன் காரணமாக, நன்னீர் மீன்பிடித் தொழிலை பிரதான தொழிலாக மேற்கொண்டு வந்த குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த குளங்களின் கீழ் வாழ்வாதாரப் பயிச்ர் செய்கைகளை மேற்கொண்டு வந்த குடும்பங்களும் கூலித்தொழில்களைச் செய்து வந்த குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 24 கிராமப் பிரிவுகளில், 2,405 குடும்பங்களைச் சேர்ந்த, 8,137 பேருக்குத் தேவையான குடிநீர் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்றைய தவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், 44 கிராம அலுவலகர் பிரிவுகளில், தற்போது குடிநீர் நெருக்கடி காணப்படுவதாக, மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், வவுனிக்குளம் உள்ளிட்ட பாரிய குளங்களின் கீழ் சிறுபோக செய்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சிறிய குளங்களின் கீழ் குறைந்தளவான பரப்புக்களிலேயே பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நன்னீர் மீன்பிடியும் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like