கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு டெங்கு பரவுகின்றது : வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் அகிலேந்திரன்

கொழும்பிலிருந்து வருபவர்களினாலேயே வவுனியாவில் டெங்கு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது என வுவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் இன்று (08-07)  தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.அகிலேந்திரன்,

கொழும்புக்கு சென்று வருபவர்களாலேயே டெங்கு நோய் வவுனியாவில் பரவி வருகின்றது ஆகவே கொழும்பிற்கு அனாவசியமான பயணங்களைத் தவிர்குமாறும் கொழும்பிலிருந்து வருபவர்கள் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்தப்பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் கொழும்புப் பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் டெங்கு வைரஸ் வழமையான வைரஸ்சை விட வீரியங்கொண்டதாக உள்ளதால் டெங்கு நோயை தவிர்ப்பதற்கான வழிவகைகளை மக்கள் கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

கொழும்புக்கு பயணிப்பவர்கள் டெங்கு நுளம்பு தாக்காதவாறு உடலை மூடி உடையணிவதுடன் நுளம்புகள் அணுகாதவாறு கிறீம் மற்றும் எண்ணைகளை பயன்படுத்துமாறு தெரிவித்தார்.

அத்துடன் இரண்டு தினங்களுக்கு முன் டெங்கின் காரணமாக மரணித்தவர் கூட கொழும்பிலிருந்து டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகி வந்தநிலையிலேயே சிகிச்சை பலனின்றி மரணித்ததாக குறிப்பிட்ட அவர் வவுனியாவில் 16 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திலிருந்து இருவர் மாத்திரமே டெங்கு தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.

வீட்டு சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்களை இனங்கண்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

You might also like