குப்பைகளில் இருந்து மின்சாரம்! இலங்கையில் புதிய திட்டம்

கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பைகளில் இருந்து மின்சாரத்தினை பெறும் திட்டம் ஒன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

குப்பைகளை சிறந்த முறையில் முகாமை செய்வதற்கு புத்தளம் அருவக்காறு பிரதேசத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தலை நகர் கொழும்பையும் அதனை அண்டிய நகரங்களிலும் தேங்கியுள்ள குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேவையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளினால் பொதுமக்களின் வழமையான வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார நிலை என்பன பாரிய பாதிப்புக்கு உள்ளாகின்றன.

எனவே நாட்டின் அழகையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்காத முறையிலும், இந்த குப்பைகளைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தலைநகர் கொழும்பின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டிய சுமார் 700பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வீ.கே அநுர தெரிவித்துள்ளார்.

You might also like