யாழ். ஊடகவியலாளரைிற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி சேவை ஒன்றில் யாழ். மாவட்ட ஊடகவியலாளராக கடமையாற்றும் த.பிரதீபனுக்கு கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே நாளை மறுதினம் 10ம் திகதி காலை 08.30 மணியளவில் முன்னிலையாகுமாறு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தின் மூலமாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 08ம் திகதி யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்களின் சிங்களம் மற்றும் தமிழிலான ஒளிப்பதிவு நாடாக்களுடன் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி விசாரணைக்கான அழைப்பு நேற்று வெள்ளிக்கிழமை (07) விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஊடகவியலாளர் ஏற்கனவே விபத்துக்குள்ளாகி உடல் ரீதியான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையால் குறித்த விசாரணைக்குத் தன்னால் முன்னிலையாக முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

You might also like