கடந்த ஆட்சியில் வெள்ளை வான் – தற்போது கறுப்பு டிபென்டர்!

கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானுக்கு பயந்தே அதிகாரிகள் வேலை செய்ததாக தற்போதைய ஆட்சியாளர்கள் குறிப்பிடுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அப்படியாயின் தற்போது கறுப்பு டிபென்டர்களுக்கு பயந்தா அதிகாரிகள் வேலை செய்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

திருகோணமலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஆட்சிக்காலத்தில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மஹிந்த, மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை மறைக்கவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, டெங்கு ஒழிப்பிற்கு கடந்த அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதும், தற்போதைய அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் திண்டாடுகின்றதென மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது ஆட்சிக்காலத்தில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்களே தவிர, அவர்களை கொலை செய்யவில்லையென தெரிவித்த மஹிந்த, எனினும் சர்வதேசத்திற்கு வேறு விதமாக சித்தரித்து தம்மையும் ராணுவத்தையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் கைங்கரியத்தை தற்போதைய அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது கடமையை சரிவர செய்வதில்லை என்றும், தாங்களே நாட்டின் உண்மையான எதிர்க்கட்சியினர் என்றும் மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like