கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் அனுஸ்டித்தவர்களை அச்சுறுத்தும் தேசத்துரோகக் கும்பல்…

தமிழர்களது விடுதலைக்காகத் தம்மையே தற்கொடையாக்கிய கரும்புலி மாவீரர்களை யூலை 5 ஆம் திகதி கிளிநொச்சியில் விளக்கேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்திய உறவுகளை அச்சுறுத்தி மிரட்டி குழப்பத்தை ஏற்படுத்த முனையும் தேசத்துரோகக் கும்பல்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் நிலவிய இராணுவ அடக்குமுறைகள், ஒட்டுக்குழுக்களின் அட்டகாசங்கள் காரணமாக கடந்த 7 வருடகாலமாக தாயகப் பகுதிகளில் தமது இன்னுயிர்களைத் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஈகம் செய்த கரும்புலி மாவீரர்களை அவர்களது உறவுகள் நினைவுகூர முடியாத அச்சுறுத்தலான சூழ்நிலையே காணப்பட்டது.

தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வந்ததனைத் தொடர்ந்து மைத்திரி ஆட்சியில் தமிழர்கள் ஓரளவுக்கு நடமாடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழர்களது விடுதலைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்த தமது உறவுகளை விளக்கேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தி நினைவுகூருவதற்காக காத்திருந்த மக்கள் அதனைச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்களப் பேரினவாதத்திற்குத் துணைபுரியும் அவர்களது கைக்கூலிகள் மக்ளைக் குழப்பி, அச்சுறுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு முயன்று நிற்கின்றார்கள்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனை அடுத்து கடந்த 7 வருடங்களாக நினைவுகூரப்படாதிருந்த நிலையில் தம் இன்னுயிர்களையே தமிழ் மக்களின் விடுதலைக்காக ஈகம் செய்த கரும்புலி மாவீரர்களை கரும்புலிகள் நாள் யூலை 5 இல் நினைவுகூருவதற்காக மாவீரர்களின் உறவுகள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை நாடி அதற்குரிய ஒழுங்கமைப்புக்களை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தாங்கள் செய்து தருவதுடன் அதற்கான பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்கு அமைவாக 7 ஆண்டுகளின் பின்னர் தமிழர் தாயகப் பகுதியில் இம்முறை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஒழுங்கபைபின்படி கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் யூலை-5 கரும்புலிகள் நாளன்று கரும்புலி மாவீரர்களது உறவுகளை ஒருங்கிணைத்து மிகவும் உணர்வெழுச்சியாக கரும்புலிகள் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத மஹிந்த தரப்பு பேரினவாதிகள் சிலரும் அவர்களது கைக்கூலிகளாகச் செயற்படும் ஒட்டுக்குழுக்கள் சிலவும் மஹிந்த கனவை நனவாக்கத் துடிக்கும் சுயநல நோக்கம் கொண்ட அரசியல் கட்சிக்கார்கள் சிலரும் தமது இன்னுயிர்களை தமிழ் மக்களின் விடிவுக்காக ஈகம் செய்த புனிதர்களான மாவீரர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்ட கரும்புலிகள் நாள் நிகழ்வை கொச்சைப்படுத்தி அதற்கு அரசியல் சாயம் பூசி மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர்களின் உறவுகள் சிலரை நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தி வருகின்றார்கள்.

‘இவ்வளவு காலமும் செய்யப்படாத கரும்புலிகள் நாளை நீங்கள் கிளிநொச்சியில் செய்ததன் மூலம் சிங்களவன் மறந்திருந்த எல்லாவற்றையும் அவனுக்கு நீங்கள் நினைவு படுத்தியுள்ளீர்கள்.

இதன் விளைவுகளை நீங்கள் வெகு விரைவாக அனுபவிக்க வேண்டிவரும். கரும்புலித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

அவர்கள் உங்களை இனங்கண்டுள்ளார்கள் அவர்கள் உங்களைச் சும்மா விடுவார்கள் என்றா நினைக்காதீர்கள். நாங்கள் இவளவு உயர்மட்டச் செல்வாக்கு, பலம் எல்லாவற்றோடு இருந்தும் ஏன் நாங்கள் இதனைச் செய்ய முயற்சிக்கவில்லை என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்கு வேற வேலை இல்லையோ? இப்ப என்ன புலிகள் இருக்கிறார்களோ? அல்லது இனிவரும் காலத்தில் புலிகள் வருவார்களோ?, செத்துப்போன புலிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இனியும் ஏன் நம்புகின்றீர்கள்? அவர்களை நம்பாதீர்கள்,

அவர்களை இனியும் நீங்கள் நம்பினால், புலிகளின் கரும்புலிகள் நாள், மாவீரர் நாள் போன்றவற்றை கடைப்பிடிக்க உங்களை அழைத்து தூண்டிவிட்டு உங்களை நல்லா மாட்டிவிடுவார்கள், நீங்கள் கரும்புலிகள் நாள், மாவீரர் நாள் செய்வதால் செத்துப்போன உங்கள் பிள்ளைகள் என்ன திரும்பி வந்துவிடவோ போகிறார்கள்?

இதனால் உங்களுக்கும் இப்போது இருக்கிற உங்கட பிள்ளைகளுக்கும் தானே ஆபத்து பழையதை மறந்து விலக்கிவிட்டு புதியதைச் சிந்தித்துப் புதிய வாழ்கையை அமைதியாக வாழப்பழகுங்கள். அதுதான் எல்லாருக்கும் நல்லது.

ஆனால் மறந்திருந்த கரும்புலிகள் நாளை நீங்கள் கிளிநொச்சியில் செய்ததற்காக எப்படியும் உங்களை அவர்கள் சும்மா விடமாட்டாங்கள்.

இனி என்றாலும் அவதானமாய் அறிவைப் பயன்படுத்தி தப்பித்து வாழப் பழகிக்கொள்ளுங்கள்” என்று கூறி கிளிநொச்சியில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாவீரர்களின் உறவுகளை மிரட்டி பயமுறுத்தும் பாணியில் அச்சுறுத்திவருவதாகக் கூறி கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like