வவுனியாவில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் கணவன் மனைவி கைது

வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் காட்டில் வாழ்ந்துவந்த கணவன் மனைவியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா – பாலமோட்டை காட்டில் வசித்து வந்த குறித்த தம்பதியினரை நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வவுனியா பாலமோட்டை, காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வசித்து வந்த கணவன், மனைவி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, கைக்குண்டு, இடியன் துப்பாக்கி என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் காட்டில் பல காலமாக வசித்து வந்துள்ளதாகவும் கணவன் மீது மாங்குளம், ஓமந்தை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கசிப்பு உற்பத்தி செய்து வருவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like