இலங்கை அகதி மாணவிகள் 68 பேருக்கு ஏற்பட்ட நிலை! கோரிக்கை மனு தாக்கல்

இந்தியாவில் மண்டபம் அகதி முகாமில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் இலங்கை அகதி மாணவியர் தமது பள்ளி இயங்கும் இடத்தை மாற்ற வேண்டாம் எனக் கோரி மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.நடராஜனை நேரில் சென்று சந்தித்து குறித்த மனுவை இலங்கை அகதி மாணவிகள் கையளித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதி முகாமில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 600 பேர் படித்து வருகின்றனர். அதில் 68 பேர் இலங்கை அகதி மாணவிகள்.

இந்த நிலையில் மண்டபத்தில் தியாகராய நகர் பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளிக்கென புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மண்டபம் அகதி முகாமில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை தியாகராய நகர் பகுதிக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதை தடுத்து நிறுத்துமாறு குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாற்றம் செய்யப்படவுள்ள பள்ளி, அகதிகள் முகாமிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்திலுள்ளது. போதுமான போக்குவரத்து வசதிகளும் இல்லை.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையை கடந்துவர வேண்டியுள்ளது.

எனவே இது எமக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் செயற்பாடு.

எமது பள்ளிக்கான இடத்தை மாற்ற வேண்டாம். நாம் பழைய இடத்திலேயே கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like