வவுனியாவில் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரம் வெளியீடு

வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 102 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 24, 507 குடும்பங்களைச் சேர்ந்த 85, 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியாவில் 42 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 11, 256 குடும்பங்களை சேர்ந்த 39, 382 பேரும், வவுனியா வடக்கைச் சேர்ந்த 20 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 2, 923 குடும்பங்களை சேர்ந்த 10, 419 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, வவுனியா தெற்கைச் சேர்ந்த 20 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 5, 316 குடும்பங்களைச் சேர்ந்த 18, 605 பேரும், வவுனியா வெண்கலச் செட்டிக்குளத்தைச் சேர்ந்த 20 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 4, 962 குடும்பங்களைச் சேர்ந்த 17, 365 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நிலக்கீழ் நீர் வற்றிப் போயுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளான வவுனியாவில் 350 குடும்பங்களைச் சேர்ந்த 1, 225 பேருக்கும், வவுனியா வடக்கு 3 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 128 குடும்பங்களைச் சேர்ந்த 488 பேருக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், வவுனியா வெண்கலச்செட்டிக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 189 குடும்பங்களை சேர்ந்த 870 பேருக்குமாக மொத்தம் 667 குடும்பங்களைச் சேர்ந்த 2583 பேருக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது 06 தண்ணீர் பவுசர்களே மக்களுக்காக நீர் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றது. வவுனியா மாவட்டத்தில் வறட்சி அதிகரித்து வரும் நிலையில் மேலும் 16 நீர்த்தாங்கிகள், தண்ணீர் வடிகட்டி இயந்திரம் போன்றவற்றிற்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

நீரின் தட்டுப்பாடு காரணமாக விவசாய செய்கைகளில் மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதன்காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஸ்ட ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like