தாக்குதல் நடத்தியவர் நொண்டியவாறு ஓடினார்!- நீதிபதி இளஞ்செழியன்

நான் வழமையாக கோயில் வீதியில் பயணிப்பதை அவதானித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். துப்பாக்கிதாரியை நோக்கி பொலிஸ் உத்தியோகத்தர் சூடு நடத்தினார்.

அவர் நொண்டியவாறு ஓடியதை அவதானித்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வாகனத்தில் பயணித்தபோது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயப் பின் வீதியில் இன்று மாலை 5.50 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போது மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு குறிப்பிட்டார்.

மெய்ப் பாதுகாவலர்களின் சடுதியான செயற்பாட்டதால் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மெய்ப் பாதுகாவலர்கனில் ஒருவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படும் பிஸ்டல் ஒன்று நல்லூர் ஆலயத்துக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையிலான தீர்ப்பாயத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

You might also like