கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளும் வறட்சியில் பாதிப்பு!

தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக மாவட்டத்தில் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சி நிலைமை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையானது எமது மாவட்டத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டதிலுள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளிலும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 42 ஆயிரம் குடும்பங்களில் 23,000 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேச செயலகங்களினுடாக அறிக்கையிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் 83,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 32 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள நான்காயிரம் பேருக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு போதிய வவுசர் வசதிகள் இல்லை. குறைந்தளவு நீர் விநியோகங்களைச் செய்யக்கூடிய உழவு இயந்திர பௌசர்கள் உள்ளன.

அத்துடன் தேவைகளை இனங்கண்டு அவற்றை பூர்த்தி செய்ய வேண்டிய வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், குறைந்தது 6 மாத காலத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like