யாழில் ஆறு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த மர்மக் கும்பலின் அட்டகாசத்தால் பெரும் பதற்றம்

யாழ். ஏழாலை மற்றும் சூராவத்தைப் பகுதியில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக் கும்பல் வாள்களைக் காட்டிப் பொதுமக்களைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளதுடன்,மர்மக் கும்பலின் தாக்குதலினால் ஏழாலை மற்றும் சூராவத்தைப் பகுதிகளில் தொடர்ந்தும் பெரும் பதற்றம் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

ஒவ்வொரு மோட்டார்ச் சைக்கிள்களிலும் மூன்று பேர் வீதம் மொத்தமாகப் பதினெட்டுப் பேர் கொண்ட கும்பலொன்று வந்துள்ளது.

குறித்த கும்பல் சூராவத்தைப் பகுதியிலுள்ள குறுக்கு வீதிகளுடாகப் பயணித்து ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூஷணி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியை வந்தடைந்துள்ளது.

அந்தப் பகுதியில் தம்புள்ளை சந்தைக்கு மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு செல்வதற்குத் தயாராக நின்ற பாரவூர்தியொன்றின் மீது தாக்குதல் நடத்தி அதன் கண்ணாடிகளை உடைத்து நொருக்கியுள்ளது.

குறித்த கும்பல் வீடுகளுக்குள் இருந்த பொதுமக்களைக் கடுமையாக அச்சுறுத்தும் வகையில் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

எனினும், தாக்குதலில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அதன் பின்னர் குறித்த கும்பல் வீதியால் சென்றவர்களுக்கு வாள்களைக் காட்டிக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளதுடன் வாள்களை வீதியில் பொறி பறக்கவும் இழுத்துச் சென்றுள்ளது.

அத்துடன் ஏழாலை தெற்குப் பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நின்ற வர்த்தகர்களை அநாகரிகமான வார்த்தைகளால் ஏசியுள்ளதுடன் வாள்களைக் காட்டி மிரட்டி விட்டும் சென்றுள்ளனர்.

இக் கும்பல் பயணித்த மோட்டார்ச் சைக்கிள்கள் அனைத்தினதும் வாகன இலக்கத் தகடுகள் அனைத்தும் சாக்குகளால் மூடி மறைத்திருந்ததுடன், ஹெல்மெட்டும் அணிந்திருந்தனர்.

அத்துடன் அனைவரும் முகங்களைக் கறுப்புத் துணிகளால் மறைத்திருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பின்னர் பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதனையடுத்து இரு வாகனங்களில் பெருமளவு பொலிஸார் ஏழாலை தெற்குப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இதன் பின்னர் குறித்த மர்மக் கும்பல் அப்பகுதியிலிருந்து காணாமல் போயுள்ளது.

இரவு வேளையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் குறித்த கும்பலைச் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கியது யார்? இது எமக்குப் பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இரவு வேளையில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து இன்றைய தினம் இரவு குறித்த பகுதிகளுக்குப் பொலிஸார் பாதுகாப்பு வழங்காமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

You might also like