பாரதிபுரம் மது விற்பனை நிலையத்தை இடமாற்றுமாறு மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி – பாரதிபுரம் செபஸ்தியார் வீதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரி பாரதிபுரம் மக்கள் கையொப்பம் இட்ட கடிதம் ஒன்றினை கிராம சேவையாளர் ஊடாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிற்கு இன்று(15) அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த விற்பனை நிலையம் இரணைமடு சந்திக்கு அண்மையிலும், இரணைமடு பொதுச்சந்தைக்கு நேரெதிரிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாரதிபுரம் மக்களின் நாளாந்த போக்குவரத்து பிரதான வீதியிலும் அமைந்துள்ளமையால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பாரதிபுரம், மலையாளபுரம் மற்றும் கிருஸ்ணபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த 12 பொது அமைப்புக்கள் இணைந்து அதை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், மது விற்பனை நிலையத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் இரண்டு பக்கங்களிலும் சைவ ஆலயங்களும், 100 மீற்றர் தொலைவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும், 150 மீற்றர் தொலைவில் சிறுவர் முன்பள்ளி ஒன்றும் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், மது விற்பனை நிலையத்தினை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரி சுமார் 06 மாதங்களுக்கு முன் பாரதிபுரம் கிராம அமைப்புக்களினால் கடிதம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக, பொலிஸ் அத்தியட்சகர் , மதுவரித் திணைகளம் , பனை தென்னை அபிவிருத்திச்சங்கம் , ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பதில் கடிதம் ஒன்று வந்ததே தவிர எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குறித்த மது விற்பனை நிலையத்தை அந்த இடத்தில் நடத்துவதற்கான அனுமதி இவ்வருடத்துடன் நிறுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகாத நிலையில் மது விற்பனை நிலையம் வழமைபோல் இயங்கி வருகின்றதாகவும் அப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றாக செயற்பட்டு மது விற்பனை நிலையத்தினை வேறு இடத்திற்கு மாற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

மேலும், வெகு விரைவில் அச்செய்தியினை எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு அந்த கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like