வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் காத்தார்சின்னகுளத்தில் பொலிஸ் நடமாடும் சேவை

வவுனியா பொலிசாரினால் பொலிஸ் நடமாடும் சேவை நிலையமொன்று இன்று (23.07) காலை 10 மணியளவில்   காத்தார்சின்னகுளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள அண்ணாநகர் கிராமத்தில் கோவில் பிரார்த்தனைகளின் பின்னர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார இந்நிலையத்தினைத் திறந்து வைத்தார். இதன் போது வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சோமரத்ன விஜயமுனி,  பிரதேசத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்க தலைவர் கே.ராஜலிங்கம்,  கிராம சேவகர்கள், மத தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பொலிஸ் அதிகாரிகள்  எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவை நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (23.07) தொடக்கம் எதிர்வரும் ஆவணி மாதம் (23.08) வரை சுமார் ஒரு மாத காலம் செயற்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதன் மூலம் பிரதேசத்தின் புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களினால் முன்வைக்கப்படும் பிரதேசத்தின் அபிவிருத்திப்பணிகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக  அடையாளங்காணப்பட்டு அவற்றினை நிறைவேற்றி முடிப்பதற்கு வழிகாட்டியாகச் செயற்படுதல் மக்களின் முறைப்பாடுகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்தல், சிரமதானம், வடிகால் அமைத்தல், துப்பரவு செய்தல், வீதி அமைத்தல் போன்ற பல்வேறு பொது மக்கள் நலன்சார்ந்த பணிகனை முன்னெடுக்கவுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் கிட்னி  பாதிக்கப்பட்டு வசதியற்ற  k.கமலநாதன் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்காக அடிகல்நாட்டி வைக்கப்பட்டதுடன் இவ் ஒரு மாத கால முடிவுக்குள் வீடு கட்டி கொடுப்பதாக பொலிசார் உறுதியளித்திருந்தனர். நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதுள்ள அம்மாவிற்கு முச்சக்கர நாற்காலி வழங்கியும் வைக்கப்பட்டது.  அத்துடன் பாடசாலை  மாணவர்களுக்கு பரிசு பொருட்களும், கண் பார்வை குறைவுற்றோருக்கான கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

You might also like