நீதிபதி இளஞ்செழியன் மீது திட்டமிட்ட கொலை முயற்சி தாக்குதல்! சிங்கள ஊடகம் தகவல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் சம்பவமானது நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த கருத்தினை மறுத்துள்ள குறித்த ஊடகம் , இந்த தாக்குதல் நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என கூற முடியாதென குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் அதிகாரி வழங்கிய சாட்சியங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, நீதிபதியின் வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளார். அவர் துப்பாக்கிதாரியுடன் போராடிய சந்தர்ப்பத்தில் மற்றைய அதிகாரி நீதிபதியை துப்பாக்கிதாரியிடம் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

துப்பாக்கிதாரி ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பலவந்தமான அருகிலிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.

தாக்குதல் சம்பவம் குறித்து நீதிபதி இளஞ்செழியன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். துப்பாக்கிதாரி தாக்குதல் தொடர்பில் நன்கு பயிற்சி பெற்ற ஒருவர் என குறிப்பிட்டிருந்தார்.

இவற்றினை அடிப்படையாக வைத்து நீதிபதியை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என கூற முடியாதென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு கொழும்பு குற்ற புலனாய்வு விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிபதி மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டிதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, துரிதமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நேற்றையதினம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like