வவுனியாவில் நீதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை கண்டித்து தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து இன்று (24.07.2017) வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தனியார் பேரூந்து உரிமையாளர்கள்,

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம்.

நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.

நீதிபதி மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை கண்டித்து இன்று  வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர்களாகிய நாம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாது பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

எனினும் இ.போ.ச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது சேவையில் ஈடுபடுவது தொடர்பாக இ.போ.ச வடபிராந்திய இணைந்த தொழிற்சங்க உப தலைவர் கோபிகிருஸ்னனிடம் வினாவிய போது,

இன்று வடக்கு மாகாண அனைத்து பாடசாலைகளிலும் இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெறுவதன் காரணமாக எமது மாணவர்களின் நன்மை கருதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது சேவையில் ஈடுபட்டுள்ளோம்.

ஆனால் யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை வண்மையாக கண்டிப்பதோடு தாக்குதலால் உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான நீதித்துறை மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாது காவல்த்துறை செயற்பட வேண்டும் என இ.போ.ச வடபிராந்திய இணைந்த தொழிற்சங்க உப தலைவர் கோபிகிருஸ்னன் தெரிவித்தார்.​

You might also like