வவுனியாவில் சட்டத்தரணிகள் நீதிபதி மீதான துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து பணிப்புறக்கணிப்பு

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (24.07.2017) காலை வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள் வவுனியா மாவட்டத்திலும் 8 வருடங்களாக பணியாற்றியவர். அவரது துணிச்சலான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை யாவரும் அறிவர். பல சவால் மிக்க வழக்குகளை விசாரித்து வரும் நிலையில் அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளபபட்ட துப்பாக்கி பிரயோகம் நீதித்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயற்பாடாகும். இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

விசாரணைகள் முழுமை பெறாத நிலையில் பொலிசார் இத் தாக்குதல் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்கள் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என கோருவதுடன், நீதிபதிகளின் பாதுகாப்பையும் அதிகாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த பணிப்புறக்கணிப்பில் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் கலந்து கொண்டதுடன் வாயில் கறுப்புத்துணியினை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like