இளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிப்பிரயோகத்தைக் கண்டித்தும், உண்மையான தாக்குதல்தாரிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்த பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரி குறித்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற வழக்குகளில் முன்னிலையாகாது சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, உண்மையான தாக்குதல்தாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வடமாகாண சட்டத்தரணிகள் கூட்டாக சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாணம் முழுவதும் பல்வேறு அரச மற்றும் தனியார் துறையைச் சார்ந்தவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் எனக்கோரி வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றைய தினம் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வரும் ஆசிரியர்களின் வருகை மிகக்குறைவாக காணப்பட்டுள்ளதோடு, கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அரச உத்தியோகத்தர்களின் வருகையும் குறைவாக காணப்படுவதோடு, பொதுமக்களின் இயல்புநிலைபெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிளிநொச்சி நகரம் மற்றும் ஏனைய பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் இன்மையால் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like