வவுனியாவில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெண் ஒருவரை கடத்திச் சென்ற குற்றத்திற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாஸ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2007 ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் கணெய்சுந்தரம் கண்ணதாஸ் (வயது 50) என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக  2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்பவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டுக்காக குற்றப் பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

2016 மே மாதத்தில் இருந்து குறித்த எதிரிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்  முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணினுடைய தந்தை நாகரத்தினம் விஜயபாலன், தாய் விஜயபாலன் சாந்திமலர் சாட்சியமளித்திருந்தனர். இதன்போது தனது மகளை குறிப்பிட்ட எதிரி வீட்டில் இருந்து இழுத்துச் சென்றதாக சாட்சியமளித்தார். அத்துடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும் சாட்சியமளித்தனர். அதன் பின் எதிரி நீதிமன்றிலே சாட்சியமளித்திருந்தார்.

எதிரி சாட்சியமளிக்கும் போது தான் தற்போது யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருவதாகவும், தான் ஏற்கனவே விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவித்திருந்தார்.

எதிர்தரப்பு விவாதம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் தீர்ப்புக்காக இம் மாதம் 17 ஆம் திகதி வழக்கு நியமிக்கப்பட்டு அன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்டு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எதிரியை குற்றவாளி எனக கண்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கியதோடு, தண்டனைத் தீர்ப்புக்காக இன்றைய தினம் (25.07) வழக்கு நியமிக்கப்பட்டு இருந்தது.

இந்த எதிரி ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் எதிரிக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி இந்த எதிரிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட குறித்த பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன நெறிப்படுத்தியிருந்தார்.

You might also like