வவுனியா இராணுவ முகாமில் இராணுவ கோப்ரலை கொலை செய்த இரானுவ வீரருக்கு 2வருட கடூழிய சிறை

கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவ கோப்ரலை கொலை செய்த குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்களால் வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் வைத்து இராணுவக் கோப்ரல் அம்பகஸ் பிட்டிய ஆராய்சிலாக நிரஞ்சன் குமார பண்டார என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக 2011 ஆம் ஆண்டு எதிரியான அதே இராணுவ முகாமைச் சேர்ந்த திசநாயக்க முதியன் திலாக தனுஸ்க பண்டார என்பவர் கைது செய்யப்பட்டார்.  குறித்த நபர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் குறித்த இராணுவ வீரரான எதிரி இராணுவ கோப்ரல் அம்பகஸ் பிட்டிய ஆராய்சிலாக நிரஞ்சன் குமார பண்டார என்பவருக்கு மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு யூன் மாதம் 20 ஆம் திகதி வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவ உத்தியோகத்தர்களுடைய ஆண்டுப் பூர்த்தி விழா ( பற்றாலியன் பார்ட்டி) நடைபெற்றது.

அன்யை தினம் குறித்த முகாமில் பகல் இரவாக கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இரவு நேரம் உணவும் குடிவகைகளும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எதிரியும் இறந்த நபரும் சம்பவ தினம் மதுபோதையில் இருந்துள்ளனர். அன்றைய தினம் அதிகாலை 3.30 – 4 மணியளவில் இந்த எதிரிக்கும், இறந்த நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்தர்க்கத்தின் காரணமாக எதிரி இறந்த நபரை தாக்கியதாகவும், இறந்த நபர் இந்த எதிரியைத் தாக்கியதாகவும் சாட்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடுனர் தரப்பு சார்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வழக்கு தொடுனர் தரப்பால் பம்பைமடு இராணுவ முகாம் உத்தியோகத்தர்கள் சாட்சியம் வழங்கியதுடன், எதிரியும் சாட்சியமளித்திருந்தார். எதிரி தனது சாட்சியத்தில், மரணித்த இராணுவ கோப்ரல் தன்னை தாக்கியதாகவும், அதன்காரணமாக அவரது பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள திருப்பி தாக்கிவிட்டு ஓடிச் சென்றதாக சாட்சியமளித்திருந்தார்.

இதன் பின் குறித்த வழக்கு தீர்ப்புக்காக இம் மாதம் 17 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கியிருந்தார். அன்றைய தினம் தீர்ப்புக்காக வழக்கு ஆரம்பிக்கப்பட்ட போது நீதிபதி, இந்த எதிரிக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு இருந்தாலும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளை, இந்த எதிரியும் இறந்த நபரும் மது போதையில் இருந்ததாகவும், இந்த எதிரி ஏற்கனவே இறந்த நபரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கவில்லை என்பதையும் அவர்கள் இருவருக்கும் இடையில் பியர் சம்மந்தமாக ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த எதிரி இறந்த இராணுவ கோப்ரலை தாக்கியுள்ளார். இதனால் அவர் இறந்துள்ளார் என்பதனை சுட்டிக்காட்டி குற்றவாளியாக எதிரியை இனம் கண்டார்.

இன்யைதினம் (25.07) தண்டனைத் தீர்ப்புக்காக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த எதிரிக்கு எதிராக மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், ஒரு இலட்சம் ரூபாய் நஸ்டஈடும்  வழங்க வேண்டும் எனவும் அத்துடன் ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். குறித்த வழக்கினை அரச சட்டவாதினி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.

You might also like