தந்தையுடன் வயலுக்கு சென்ற 4 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்

சூரியவெவ – விஹாரகல பகுதியில் 4 வயது சிறுவன் நீர் தேங்கிய குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தனது தந்தையுடன் வயலுக்கு சென்ற கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சூரியவெவ, விஹாரகல சேர்ந்த கசுன் தனஞ்சய என்ற 4 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது.

அத்துடன், தனது தந்தையுடன் வயலுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு எறும்பு கடிப்பதாக சிறுவன் கூறியுள்ளான். பின்னர் சிறுவனை வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு தந்தை புற்களை வெட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் 10 மணியளவில் தந்தை வீடு திரும்பிய நிலையில், மகன் வீட்டில் இல்லாத காரணத்தால் குழப்பமடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து அயலவர்களுடன் இணைந்து தனது மகனை தேடும் போது நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து கிடப்பதை பார்த்த தந்தை சிறுவனை சூரியவெவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் தொடர்பான அவசர மரண பரிசோதனை, சூரியவெவ அவசர மரண பரிசோதகரால் இடம்பெற்ற பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like