வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வெளியாரின் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு: மக்கள் சிரமம்!

வவுனியா மாவட்ட செயலகத்தின் வளாகத்திற்குள் இன்று (26) முதல் வெளியாரின் வாகனங்கள் உட்செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு தங்கள் தேவைகள் நிமித்தம் வரும் பொது மக்கள் வாகனங்களை பாதுகாப்பாக மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் நிறுத்திவிட்டு செல்வது வழமை.

அந்தவகையில் நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக்கொடியை நபரொருவர் கழற்றி வீசிய சம்பவத்தை தொடர்ந்து வெளியாரின் வாகனங்கள் மாவட்ட செயலகத்தின் வனாகத்திற்குள் உட்செல்வது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொது மகன் ஒருவர்,

மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வாகான தரிப்பிடம் ஏதுவும் இல்லாத நிலையில் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு சிரமப்படுகின்றனர். மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பாரிய இடவசதியுடன் மர நிழலும் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மக்கள் தங்கள் கருமங்களை ஆற்றக்கூடியதாக இருந்தது.

பட்டபகலில் மாவட்ட செயலகத்தின் முற்றலில் தேசியக்கொடி இறக்கப்பட்டதானது பாதுகாப்பு ஊழியர்களின் அசமந்தத்தை காட்டுகிறது. சுமூக நிலையிலிருந்த மாவட்ட செயலகத்தின் நிலைமை மனநோயாளி ஒருவரின் செயற்பாட்டால் பொது மக்களுக்கு இடையூறாக மாறியுள்ள நிலையில் இம் முடிவை அரசாங்க அதிபர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

You might also like