உமையாள்புர மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் : ஊர்மனைக்குள் குப்பைகள்

கிளிநொச்சி – உமையாள் புரம் பகுதியில் உரிய முறையில் குப்பைகளை கொட்டாத காரணத்தினால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமத்தை எதிர்கொள்வதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் உமையாள்புரம் பகுதியில் கொட்டப்படுகின்றன.

அத்துடன் அறிவியல் நகரில் அமைந்துள்ள பழச்சாறு உற்பத்தி நிலையம் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் உமையாள்புரம் பகுதியில் மக்கள் குடியேற்றத்திற்கு அண்மையில் கொட்டப்படுகின்றன.

அதுமாத்திரமன்றி பொதுமக்களுக்கு சொந்தமான சில காணிகளிலும் இவ்வாறான கழிவுகள் கொட்டப்படுவதாக குறிப்பிடும் அப்பகுதி மக்கள், இதனால் தாங்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

உரிய தரப்பினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தடவைகள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் குப்பைகள் கொட்டப்படுவது இடைநிறுத்தப்படவில்லை என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதுகாப்பு வேலிகள் அற்ற திறந்த வெளியில் வைத்தியசாலை கழிவுகள், மற்றும் சந்தைக்கழிவுகள், மாமிச கழிவுகள், பறவைகள் விலங்குகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இவற்றை கட்டாக்காலி நாய்கள் மற்றும் காகங்கள் ஊர்மனைக்குள் போடுவதுடன் பொலித்தீன் கழிவுகள் காற்றினால் பல்வேறு திசைகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இவ்வாறான கழிவுகளை எரிப்பதற்கோ புதைப்பதற்கோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிடும் மக்கள், பிராந்திய உள்ளூராட்சி திணைக்களம், மாகாண சபைகள் என்பன குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like