முல்லைத்தீவில் 1600 பேருக்கான சமுர்த்தி உதவிக் கொடுப்பனவுகள் நிறுத்தம்

முல்லைத்தீவில் சமுர்த்தி பெற்று வந்த வறுமைக் கோட்டின் கீழுள்ள 1600 பேருக்கு சமுர்த்தி உதவிக்கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் 11,000 பேர் சமுர்த்தி பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு சமுர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

இந்த நிலையில் 2012ஆம் ஆண்டிற்குப் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கரைதுரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் எந்தவிதமான சமுர்த்தி கொடுப்பனவுகளிலும் உள்வாங்கப்படாது காணப்பட்டுள்ளன.

அத்துடன், 24 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சுமார் ஏழாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகளின் தேவையுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே சமுர்த்தி பெற்ற 1600 பேருக்கு சமுர்த்திக்கொடுப்பனவானது நிறுத்தப்பட்டமையானது இந்த மாவட்டத்தில் சமுர்த்தி பெற்று வந்த மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் 136 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சமுர்த்தி பயனாளிகளைத் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like