விநாயகபுரத்தில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை – விநாயகபுரம் என்ற இடத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கல்மடு வீதி, மருதநகர் – வாழைச்சேனையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான நகை (கூலி) தொழிலாளியான இராசையா ரவீந்திரன் (வயது37) என்பவர் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

விநாயகபுரம் பிள்ளையார் கோயில் காணிக்கும் விநாயகபுரம் பொது மயானத்திற்கும் இடைப்பட்ட தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் சடலம் ஒன்று இருந்ததை அவதானித்த பொதுமக்கள், வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like