விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கத்தில்: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக தீர்ப்பு அளித்திருந்தது.

எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே இருக்கும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய இயக்கங்களின் சொத்துக்களை முடக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

இதன் படி விடுதலைப் புலிகளின் சொத்துக்களையும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியிருந்தது.

நேற்று முந்தினம் ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக அறிவித்திருந்தது.

கடந்த 2009ம் ஆண்டிற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாட்டில் ஈடுபடவில்லை என்றும், எனவே இந்த தடை தேவையற்றது எனக் கருதுவதனால் தடையை நீக்குவதாகவும் மன்றம் தெரிவித்திருந்தது.

முன்னதாக 2006ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like