கிளிநொச்சியில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு அவசியம்

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் மேலும் அதிக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துளளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் குடும்ப வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகளவில் காணப்பட்டன.

தற்போது பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் மூலம் குறித்த செயற்பாடுகள் குறைவடைந்துள்ள போதும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் பல இன்னமும் காணப்படுகின்றன.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,

மாவட்டத்தில் சட்டவிரோத மதுமான உற்பத்தி விற்பனைகளை தடுப்பது தொடர்பிலும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலும் அதிக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

இவ்வாறு சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனைகள் என்பது, மாவட்டத்தில் மிகமோசமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும் கூட சமுக ரீதியான விழிப்புணர்கள் ஏற்படுவதற்கு சில தடைகள் காணப்படுகின்றன.

இதற்கு கிராம ரீதியில் மக்கள் ஒன்று திரண்டு விழிப்புணர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தாங்களாக உணர்ந்து திருந்திக்கொள்ள வேண்டும்.

உண்மையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் போன்ற செயற்பாடுகளுக்கெல்லாம் இவ்வாறான சட்டவிரோத மதுப்பாவனை தான் என்பது எங்களால் நிருமிக்கப்பட்டிருக்கின்றது.

கிராம ரீதியாக பிரதேச ரீதியாக இவ்வாறான சட்டவிரோத மதுப்பாவனை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் மேலும் விழிப்புணர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு இவற்றைத் தடுக்கும் வகையில்அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கத் தயாராகவே இருக்கின்றோம்.

இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இதனைக் கைவிட்டு ஒரு வாழ்வாதார உதவிகளை தெரிவு செய்து அதன்மூலம் வாழ்க்கையில் முன்னேற வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்போம். அதற்கு எப்போதும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

You might also like