முற்றுமுழுதான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று சொல்ல முடியாது! சுமந்திரன்

காணாமல்போனோர் அலுவலகத்தால் முற்றுமுழுதான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் குறித்து கருத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்துரைத்த அவர்,

காணாமல் போனோர் அலுவலகத்தால் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. ஆனால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால், அதன் பின்பு காணாமல் ஆக்கப்படுதல் இலங்கையில் குற்றமாகும்.

காணாமல் போனோர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் கடத்தியவர் யார்? என்பது கண்டறியப்பட்டால், அரசாங்கம் சட்டமா அதிபர் அவர்களுக்கு எதிராக பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாகும் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வார்.

இதேவேளை, ஏனைய பல நாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்துக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை அடிப்படையாக வைத்தே எமது நாட்டில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுக்கள் போன்றது அல்ல இந்த அலுவலகம். என்று குறிப்பிட்ட அவர், காணாமல்போனோர் அலுவலகத்தால் முற்றுமுழுதான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like