ஆரோக்கியமான மாணவ சமூகத்தினாலேயே நாட்டின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்தல் முடியும் : சத்தியலிங்கம்

நாட்டின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்துவதற்கு ஆரோக்கியமான மாணவ சமூகத்தை உருவாக்குதல் வேண்டும். அவ்வாறானவர்களாலேயே இந்த சமூகத்தை எதிர்காலத்தில் நல்வழிப்படுத்தமுடியுமென வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர்  தெரிவித்துள்ளார்.

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள சுந்தரபுரம் (பழைய குடிமனை) அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வடிகட்டும் குடிநீர் இயந்திரத்தொகுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் தலைமையில்  (28.07) நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு வலய பிரதி கல்விப்பணிப்பாளர், ஓமந்தை கோட்டக்கல்விப்பணிப்பாளர், பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ்பொறுப்பதிகாரி, பெற்றோர், அசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கல்விகற்ற சமூகமே நாட்டின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த முடியும் அதற்கு மாணவர்களின் உள, உடல் நலம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பேணப்படுதல் வேண்டும். அப்படியானவர்ளே எதிர்காலத்தில் நாட்டுக்கும், வீட்டுக்கும் சிறந்த பிரஜைகளாக இருக்கமுடியும். சிறுபராயத்திலிருந்து நல்ல பழக்கவழக்கங்களை மாணவர்கள் பழகி கொள்ளவேண்டும். அத்துடன் சுத்தமான குடிநீர், போசாக்கான உணவு இவை இரண்டும் முக்கியம். வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் நாள்பட்ட சிறுநீரக நோயின் தாக்கம் வயதுவித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சுத்தமான குடிநீர்பருகாமையும் ஒருகாரணமாக கருதமுடிகிறது. இதனால் எனக்கு வருடாந்தம் ஒதுக்கப்படுகின்ற நிதியில் குறிப்பிட்ட தொகையை குடிநீர் வடிகட்டும் இயந்திரத்தொகுதிகளை பாடசாலைகளில் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்துவருகின்றேன்.

இதுவரை சுமார் 18 பாடசாலைகளுக்கு இவ்வாறான இயந்திரத்தொகுதிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். இவ்வருடமும் 8 பாடசாலைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல்பாடசாலையாக இன்று இந்த இயந்திரத்தொகுதியை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.

You might also like