யாழ். நல்லூர் உற்சவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு விசேட அறிவித்தல்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் நல்லூர் உற்சவ காலத்தில் ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்கள் மற்றும் ஆலயத்தை அண்டியுள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய பணிமனை விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை உரிய தரப்பினர் தவறாது பின்பற்ற வேண்டும் என யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து யாழ். சுகாதார பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உற்சவகாலத்தில் ஆலயச் சுற்றாடலிலும், ஆலயத்திற்கு வரும் பாதைகளிலும் தாங்கள் உள்ளெடுக்கக் கூடிய குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் சுகாதாரமற்றது என்பதை உறுதிப்படுத்தும் பட்சத்தில் அது தொடர்பான முறைப்பாடுகளை 0212222645 எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது நல்லூர் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் தொலைபேசி இலக்கமான 0718628519 இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

குழந்தைகள், சிறுவர்கள் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டோ அல்லது விநியோகிக்கப்படும் பட்சத்திலோ அவற்றை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்ப்பதோடு எமது மேற்படி தொலைபேசி இலக்கங்களிற்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அதிகளவான சீனி, சிவப்பு, செம்மஞ்சள் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்ட குளிர்பானங்கள், நிறமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளை இயன்றளவில் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

வீதியில் பரப்பப்பட்டிருக்கும் மண்ணின் சுகாதாரத்தைப் பேணும் முகமாக ஆலயச் சுற்றாடலில் வதியும் மக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களை வீதிக்கு கூட்டிச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், கோவிலுக்கு வரும் அடியவர்கள் தம்முடன் தமது வளர்ப்பு நாய்களைக் கூட்டி வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றது.

மீறும் பட்சத்தில் அவை கட்டக்காலி நாய்களாகக் கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும். அல்லது நாய்கள் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அத்துடன் குடியிருப்பாளர்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு வழங்கப்படும் பூச்சி மருந்தினை நாய்கள் உட்கொள்வதனை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றீர்கள்.

ஆலயச் சுற்றாடலுக்குப் பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் ரெஜிபோம் பொருட்களை எடுத்து வருதல், அவற்றில் உணவுப் பொதியிடுதல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஞாபகமூட்டுவதுடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அங்கப் பிரதட்சணம் மற்றும் அடியளித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் அடியவர்கள் நன்மை கருதியும், மண்ணின் சுகாதாரத்தைப் பேணும் முகமாகவும் ஆலயச் சுற்றாடலில்(உள்வீதித் தடைக்குள்) பாதணிகள் அணிந்து செல்வதை முற்றாகத் தவிர்க்கவும்.

ஆலய வீதிகளில் பரப்பப்பட்டுள்ள மணலின் மீதிருந்து உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும்(கச்சான் கோது போடுதல், கார உணவு மீதிகள் படிந்த ரெஜிபோம் மற்றும் பேப்பர் பாக் போடுதல் போன்றவற்றைத் தவிர்த்தல்) கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

ஆலயச் சூழலில் நடமாடும் பொதுமக்கள் கழிவுப் பொருட்களை வீச வேண்டிய சந்தர்ப்பங்களில் அவற்றைத் தரம் பிரித்து அதற்கென வைக்கப்பட்டுள்ள கழிவுக் கூடைகளில் இடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

ஆலயச் சுற்றாடலில் தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் அவற்றில் ஒலிபெருக்கிகளைச் சத்தமாக அலற விடுவதையோ, திரைப்படப் பாடல்கள் இசைப்பதையோ தவிர்த்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

வீடுகளில் குறித்த தினங்களில் மட்டும் தண்ணீர்ப் பந்தல் மற்றும் அன்னதான நிகழ்வுகளை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றைச் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடத்துமாறும், மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நேரிடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் டெங்கு நுளம்புகள் பெருகாதவாறு சுற்றாடலைப் பேணுவதுடன் தங்கள் வீட்டிற்குத் திருவிழாவை முன்னிட்டுப் பிற மாவட்டங்களிலிருந்து வருகை தரும் விருந்தினர்கள் காய்ச்சலுடன் வரும் பட்சத்தில் உரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

ஆலயத்திற்கு அண்மித்த சூழலில் வதியும் பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கிணறுகளை இறைத்தும், நீர்த்தாங்கிகளைச் சுத்தம் செய்தும் வாராந்தம் கிணற்றிற்குக் குளோரின் இடுவதற்குச் சுகாதாரப் பகுதியினரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்கிறீர்கள் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like