தபால்காரர் வீட்டில் குவிந்து கிடந்த 14 ஆயிரம் தபால்கள்: நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

இந்தியாவின் மும்பை நகரில் 2 வருட காலமாக தபால்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்க்காத தபால்காரரை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து மும்பை மண்டல தலைமை தபால் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மராட்டிய மாநிலம் மும்பையின் சாவ்டா நகர் சொசைட்டியை சேர்ந்தவர் விபுல். இவர், அண்மையில் தான் வசித்து வரும் கட்டிடத்தில் உள்ள காவலாளி அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு சாக்குப்பைகளில் அதிகளவில் தபால்கள் இருப்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் காவலாளியிடம் விசாரித்தபோது,

அங்குள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தபால்காரர் பிலால் என்பவர் அந்த சாக்குப்பையை வைத்து சென்றதாக தெரிவித்தார். அதன்பின்னர் அந்த சாக்குப்பைகள் அங்கிருந்து பல நாட்களாக எடுத்து செல்லப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விபுல் தபால்கள் அடங்கிய அந்த சாக்குப்பைகளை தனது செல்போனில் படம் பிடித்து, மில்ரோட்டில் உள்ள தபால் அலுவலக மேலாளரை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2 வருடமாக தபால்காரர் தன்னிடம் வழங்கப்பட்ட சுமார் 14 ஆயிரம் தபால்களை உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்க்காமல் தேக்கி வைத்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த சாக்குப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில், தபால்காரர் பிலாலை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து மும்பை மண்டல தலைமை தபால் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

You might also like