வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

வவுனியா மாவட்ட செயலகத்தை இன்று (31.07) 11.00 மணியளவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி சாந்தசோலை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சாந்தசோலை கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டுத்திட்டம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுடன் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சாந்தசோலை கிராமத்தில் 168 குடும்பங்கள் மீள்குடியேறி வசித்துவரும் நிலையில் 36 குடும்பங்கள் தொடர்ந்தும் கொட்டில் வீடுகளில் வசித்து வருவதாக தெரிவித்தனர். கடந்த 10 வருடங்களாக வீட்டுத்திட்டத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்தும் வீடுகள் வழங்கப்படவில்லை இந்தியாவிற்கு அகதிகளாக சென்று திரும்பிய மக்களும் யுத்தத்தின் காரணமாக அங்கவீனர்களானவர்களும் வசித்து வரும் நிலையில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

எதிர்வரும் ஆவணி மாதம் 11 ஆம் திகதி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி றோகண புஸ்பகுமார கிராமத்திற்கு வருகைதந்து தங்கள் பிரச்சனைகளைக்கு தீர்வு பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளதாக அம்மக்கள் மேலும் தெரிவித்தனர்.

You might also like