வவுனியாவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!

வவுனியா – நித்தியநகர் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நித்தியநகர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது 46) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபர் வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தெடர்பாக கருத்து தெரிவித்த கிராமவாசி ஒருவர்,

நித்தியநகர் கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட காலம் தொடக்கம் யானை தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.

யானை தாக்குதலின் காரணமாக கடந்த காலங்களில் விவசாய நிலங்களும் களஞ்சியப்படுத்தப்பட்ட தானியங்களும் அழிவடைந்துள்ளது.

யானை தாக்குதல் தொடர்பாக கிராம மக்கள் வனதுறையினர் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் முறைப்பாடு செய்யப்படும் நேரங்களில் மாத்திரம் கிராமத்திற்கு வரும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை மட்டும் வழங்கி விட்டு சென்று விடுவார்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டு எமது கிராமத்திற்கு மின்சார வேலி அமைப்பதற்காக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்த போதும், இன்று வரையில் பாதுகாப்பிற்காக மின்சார வேலி எமது கிராமத்திற்கு அமைக்கப்படவில்லை.

குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதேவேளை, கடந்த மூன்று மாதங்களின் முன் நித்திய நகர் கிராமம் சிறுத்தை புலியின் தாக்குதலுக்கு உள்ளாகி சில ஆடுகளை இழந்திருந்ததும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like