அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! யாழ்ப்பாணம் குறித்து இராணுவத்தளபதியின் இறுக்கமான உத்தரவு

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு குறித்து இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனை இன்றி சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு முதன் முறையாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, பலாலிப் படைத் தளத்தில் மூத்த படை அதிகாரிகள் மற்றும் படையினருடனும் கலந்துரையாடினார். குறிப்பாக யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மை காலமாக யாழ். குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், குடாநாடு தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எந்த நிலையிலும், இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனை இன்றி சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என யாழ். படைகளின் தலைமையகத்திற்கு இராணுவத்தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். படைகளின் தலைமையக தளபதியாக கடந்த ஒரு ஆண்டுகாலம் பணியாற்றிய லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இராணுவத்தளபதியாக பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like