காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணி

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை விடுவிக்கக்கோரி முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் 162ஆவது நாளை அடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மெதடிஸ் திருச்சபையின் வடக்கு, கிழக்கு மாவட்ட அவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் குறித்த கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணி ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் பாதிரியார்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆகியோர் இணைந்து கையளித்தனர்.

இந்த போராட்டத்தின்போது பெருமளவிலான பாதிரியார்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக் கோரி கடந்த பெப்ரவரி மாதம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எவ்வித தீர்வுகளுமின்றி பல பொய் வாக்குறுதிகளுக்கும் மத்தியில் 162 ஆவது நாளாக இன்றளவிலும் தொடர்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like