வவுனியாவில் 7 வயது சிறுமியை  கடத்தி வன்புனர்வுக்குட்படுத்திய மதவாச்சி மாமாவுக்கு 27 வருட கடூழிய சிறை

வவுனியா போகஸ்வேவ பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்திய மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார என்ற நபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (01.08.2017) 27 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வவுனியா போகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டுக்கு முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார (வயது 56) என்பவரை வவுனியா பொலிஸார் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றுக்கு முற்படுத்தியதன் அடிப்படையில் ஆரம்ப வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

அதன் பின்னர் 2017.03.16 ஆம் திகதி அன்று 7 வயது சிறுமியை கடத்தியமை மற்றும் பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகம் புரிந்தமை என்ற 2 குற்றச்சாட்டுக்காக இந்த எதிரிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததுடன் இச்சம்பவத்தினூடாக பாதிக்கப்பட்ட சிறுமியும் சிறுமியின் தாயாரும் சட்ட வைத்திய அதிகாரியும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தனர். அதன் பின்னர் எதிரி சாட்சியமளித்திருந்தார். இவ் வழக்கு விசாரணை இடம்பெற்று தீர்ப்பு நியமிக்கப்பட்டிருந்தது. இன்றையதினம் இவ் வழக்கு அழைக்கப்பட்டு எதிரிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களும் வழக்கு தொடுனர் தரப்பால் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த எதிரியை குற்றவாளியாக காண்பதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார்.

அதனையடுத்து தண்டணை தீர்ப்பு வழங்கும் போது ஓர் விசேட காரணத்தினை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியினுடைய தாயார் சாட்சியமளிக்கும்போது தெரிவித்ததாவது, நான் மிகவும் கஸ்ட நிலையிலேயே எனது பிளன்ளைகளை வளர்ந்து வருகின்றேன். சமூகத்திலே சிறுபிள்ளைகளுக்கு எனது மகளுக்கு ஏற்பட்டது போன்று பல்வேறு அநியாயங்கள் இடம்பெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு அநியாயங்கள் இடம்பெறாமல் நீதிபதி ஐயா தடுக்கவேண்டும் என கண்ணீர் மல்க மன்றில் தெரிவித்தார். இதனை மன்றில் சுட்டிக்காட்டிய வவுனியா மேல் நீதிமன்று நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இந்த எதிரிக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டான 16 வயதிலும் குறைந்த பெண் பிள்ளையை சட்ட ரீதியான பாதுகாவலரிடமிருந்து கடத்திய குற்றச்சாட்டுக்காக அதிகபட்ச தண்டணையாக 7 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்தார்.

இந்த எதிரிக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டான 7 வயது சிறுமியை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு அதிக பட்ச தண்டனையாக 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபா நஸ்டஈட்டினை செலுத்துமாறும் பணித்ததுடன் நஸ்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்ததுடன் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபா விதித்தார். வழக்கு தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

You might also like