கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளுக்கு பஸ்கள் பயணிப்பதில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளுக்கு பஸ்கள் பயணிக்காதன் காரணமாக, பத்தாயிரம் வரையான குடும்பங்கள் வைத்தியசாலைக்குச்  செல்வதில் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக,  அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளன​ர்.

“கிளிநொச்சி – முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு, மன்னார் யாழ்ப்பாண வீதியில் பயணிக்கின்ற பஸ்கள் சென்று வருவதில்லை. கிளிநொச்சி நகரத்தில் இருந்து முழங்காவில் பஸ் நிலையம் வரை உள்ளூர்ப் பணிகளில் ஈடுபடுகின்ற பஸ்களும், வைத்தியசாலை வரை பயணிக்காததன் காரணமாக, முழங்காவில் வைத்தியசாலை சந்தியில் இறக்கி விடப்படும் மக்கள், 500 மீற்றருக்கும் அதிகமான தூரம் நடந்து சென்று, வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

“இதனால், இரணைமாதாநகர், நாச்சிக்குடா, கரியாலைநாகபடுவான், ஜெயபுரம், கிராஞ்சி, வலைப்பாடு, பொன்னாவெளி, வேரவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வைத்தியசாலைக்குச் சென்று வருவதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளனர்.

“இதேபோன்று, அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்குச் செல்வதில் அம்பலப்பெருமாள்குளம், அமதிபுரம், ஆனைவிழுந்தான்குளம், ஆரோக்கியபுரம், வன்னேரிக்குளம், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், கண்ணகைபுரம், கோணாவில், யூனியங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன” எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like