வெளிநாட்டிலிருந்து வந்து மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்

பிலியந்தலையில் நபரொருவர் தனது மனைவியை கத்தியால் தாக்கி விட்டு தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் மிரிஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து வந்த கணவராலேயே 22 வயதுடைய மனைவி தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த யுவதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வருடம் பேஸ்புக் மூலம் குறித்த யுவதியுடன் 34 வயதுடைய தாக்குதல் மேற்கொண்ட நபர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

எனினும், தான் இரண்டு பிள்ளைகளின் தந்தை என குறித்த யுவதிக்கு தெரியப்படுத்தாமல் அவருடன் தொடர்பைப் பேணியுள்ளார்.

சில நாட்களின் பின்னர் குறித்த நபர் யுவதியின் வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவர் திருமணத்தின் பின்னர் வெளிநாடு செல்லவுள்ளதாக யுவதியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இருவருக்கும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அறிந்த அந்த நபரின் முதல் மனைவி தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு வந்து அவர் தொடர்பில் அனைத்து விடயங்களையும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, கோபமடைந்த 22 வயது யுவதியின் சகோதரர் வெளிநாட்டில் இருக்கும் அந்த நபரை தொலைபேசியில் அழைத்து விவாகரத்து செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து இன்று இலங்கை வந்த குறித்த நபர் இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியில் தாக்கி தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like