விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகிக்கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதி

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருவருக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த பாரதூரக் (கிரிமினல்) குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து பாணந்துறை மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி குசலா வீரவர்தன விலகிக்கொண்டுள்ளார்.

மொரட்டுவை கட்டுபெத்த வீதியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி பயணித்த தனியார் பஸ்ஸொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை ரிமோட் கண்ட்ரோலால் வெடிக்க வைத்து 27 பயணிகளைக் கொன்றதுடன், 40 பேருக்குப் படுகாயங்கள் விளைவித்த குற்றச்சாட்டில் தங்கவேலு நிமலன் அல்லது செல்வம், நடேசன் குகநாதன் அல்லது நென்ரில் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த தான் விருப்பப்படாததால் வேறொரு மேல்நீதிமன்ற நீதிபதிக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைக்குமாறு அவர் நீதி சேவைகள் ஆணைக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டபோது சந்தேகநபர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலமொன்றைக் கொடுத்திருந்தனர்.

அந்த வாக்குமூலத்தை அரச தரப்பில் சாட்சியமாக சமர்ப்பிக்கலாம் எனத் தீர்ப்பளித்த திருமதி குசலா வீரவர்தன இந்த வழக்கைத் தான் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று நீதி சேவைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

You might also like