வவுனியா வேப்பங்குள சமுர்த்தி வங்கி பயனாளிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறி கடும் வரட்சியின் காரணமாக  வறுமையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு சற்று ஆறுதலாக இருப்பது  இலங்கை அரசின்  வறுமை ஒழிப்பு திட்டமான சமுர்த்தி திட்டமே இத்  திட்டத்தை அமுல்ப்படுத்துவதில் பல குளறுபடிகள் ஏற்ப்பட்டுள்ள நிலையில் இன்று (02.08) சமுர்த்தி முத்திரைக்கான பணமெடுக்க வந்த வேலங்குளம் கிராமசேவகர் பிரிவிட்குட்பட்ட மக்களுக்கு வேப்பங்குள சமுர்த்தி வங்கியில் பாரிய ஏமாற்றம் ஏற்ப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வழமை போன்று இன்று மாதாந்த முத்திரைக்கான  பணமெடுக்க வந்த குறித்த மக்களிடம் முன்னறிவித்தல் எதுவுமின்றி அவர்களது முத்திரைப் பணத்திலிருந்து 2500 ரூபாவை   அங்கிருந்த உத்தியோகத்தர்கள் வெட்டி எடுத்துவிட்டு பலரை வெறுங்கையோடு அனுப்பிய சம்பவம் மக்களை பெரும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மக்கள் அவர்களிடம் ஏன் பணத்தை வெட்டி எடுக்கின்றீர்கள்  என வினவியபோது கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் (2015) அனைத்து சமுர்த்திப் பயனாளிகளுக்கும் தலா 2500 ரூபா வழங்கப்பட்டதாகவும் அதனையே வெட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் கைக்குழந்தைகளுக்கு பால்மா வாங்குவதற்காகவும் , அரிசி உள்ளிட்ட வீட்டுப்பாவனைப் பொருட்களை  வாங்குவதற்கும் தயாராக வந்த மக்கள் திரும்பிச் செல்வதற்குக்கூட பேருந்துக்கு பணமில்லாமல் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றனர்.

அந்த மக்களிடம் ஊடகங்கள் கேள்வி  எழுப்பியபோது,

தேர்தல் காலத்தில் பணம் தந்தது உண்மையெனவும், ஆனால் அது கடனடிப்படையிலோ அல்லது திரும்பப்  பெறப்படும் எனவோ கூறி அந்தப்பணம் வழங்கப்படவில்லை எனவும் தம்மிடம் அந்த பணத்தை திருப்பித்தருமாறு பலமாதங்களாக கேட்டு வந்ததாகவும் வறுமை காரணமாக அந்தப்பணத்தை மீள வழங்க முடியவில்லை எனவும், அதை தற்போது ஒரேயடியாக வெட்டி எடுப்பது என்ன நியாயம்? எனவும் அப்படி வெட்டுவதாக இருந்தால் மாதாந்தம் 500 ரூபா வீதம் வெட்டி எடுக்கலாமே எனவும், ஆதங்கப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஜனாதிபதித்  தேர்தலின்போது பலருக்கு பல சலுகைகளை அரசாங்கம் வழங்கியதாகவும் அரச உத்தியோகத்தர்களுக்கு உந்துருளிகளையும் வழங்கியதாகவும் அவற்றினை மீளப்பெறாமல் ஏழை மக்களுக்கு வழங்கிய இந்த அற்ப பணத்தினை மட்டும் ஏன்  மீள பெறுகின்றார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்தப்பணத்தை வெட்டி எடுப்பதற்கு பற்றுச் சீட்டுக்கள்  வழங்கப்படவில்லை எனவும் புத்தகத்திலும் அதை பதிவிடவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் வேப்பங்குள சமுர்த்தி வங்கி முகாமையாளரிடம் வினவியபோது அப்போதைய அரசாங்கம் சமுர்த்திப் பயனாளிகளுக்கு தலா 2500 ரூபா வழங்கச் சொன்னதாகவும் தாங்கள் தங்களது வங்கிப் பணத்திலிருந்து அதை வழங்கியதாகவும் அரசாங்கம் அந்தப்பணத்தை வங்கிக்கு வழங்காத காரணத்தினால் தாம் அதை மக்களின் முத்திரையில் வெட்டுவதாகவும் குறிப்பிட்டார்,

எது எப்படியிருப்பினும் தேர்தலின்போது மக்களின் வங்கிப் பணத்திலிருந்து பணம் வழங்கியது முதல்  ஒரேதடவையில் பணத்தை வெட்டி எடுப்பதுவரை சமூர்த்தி நிர்வாகம் மேற்கொள்ளுகின்ற   நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதுடன் தற்போது கடும் வரட்சியில் மக்கள் அல்லாடும் நேரத்தில் அவர்களின் பணத்தை அப்படியே வெட்டி எடுப்பது அவர்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கும்  நடவடிக்கையாகும். எனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இது தொடர்பில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதையே மக்கள் எதிர்பார்கின்றனர்.

You might also like