கிளிநொச்சியில் குடிநீர்க் கிணறுகளை விடுவித்து தருமாறு பொது அமைப்புகள் வேண்டுகோள்

கிளிநொச்சி – பூனகரி மற்றும் இயக்கச்சி ஆகிய பகுதிகளில் படையினர் வசமுள்ள குடிநீர்க் கிணறுகளை விடுவித்து தருமாறு பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற கடும் வறட்சியால் பல்வேறு பகுதிகளிலும் குடி நீர் நெருக்கடி நிலைமை நிலவி வருகின்றது.

தட்டுவன்கொட்டி, பளை ஆகிய பகுதிகளுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆரம்ப காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்த இயக்கச்சி குடிநீர்க் கிணறு படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கிணறானது தட்டுவன்கொட்டிக்கு குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த கிணற்றை விடுவிக்குமாறு பல்வேறு தடவைகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூநகரிப் பிரதேசத்தில் குடிநீர் தேவையுள்ள பகுதிகளுக்கு குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக இடங்களில் போதிய நீர் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக பூநகரிப் பிரதேச சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பூநகரிப் பிரதேசத்திற்கான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் தெளிகரை கிணறு மற்றும் முட்கொம்பன் பரந்தன் ஆகிய பகுதிகளிலுள்ள கிணறுகளிலிருந்தும் குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகின்ற போதும் நாளொன்றுக்கு இந்த பகுதிகளிலிருந்து 3000 ஆயிரம் லீட்டர் வரையான தண்ணீரையே பெற்றுக்கொள்ள முடிகின்றது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூநகரியின் வாடியடியில் படையினர் வசமுள்ள வைத்தியசாலைக் காணியில் உள்ள கிணற்றிலிருந்து நீரைப்பெற்றுக் கொள்வதற்கு கிணற்றை விடுவிக்க வேண்டுமென பூநகரிப் பிரதேச பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like