கிளிநொச்சியில் சீதனம் கேட்டு மனைவியை கடுமையாகத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேசத்தில் சீதனம் கேட்டு மனைவியை கடுமையாகத் தாக்கியவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டாவளைப் பிரதேசத்தில் திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தை, தனது மனைவியை சீதனம் கேட்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மனைவி கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்து இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அவரது மனைவி மன்றில் ஆஜராகி தன்னைத் தொடர்ந்து தாக்கித் துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சீதனம் கேட்டு மனைவியைத் தாக்கிய கணவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like