கிளிநொச்சியில் சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமான கார் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் கடந்த ஜூன் மாதம் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த கார் சாரதியை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த கார் சாரதி இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கடந்த மாதம் 17ம் திகதி முழங்காவில் நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற 11 வயது சிறுவன் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த வேளையில் காரினால் மோதிவிட்டு குறித்த கார் சாரதி தப்பிச்சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கார் சாரதியை பொலிஸார் கைது செய்யாமையினால் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து ஜூன் மாதம் 22ஆம் திகதி இரவு குறித்த சாரதியையும் வாகனத்தையும் முழங்காவில் பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், கைது செய்யப்பட்ட சாரதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்றயை தினம்(03) குறித்த சாரதி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்திற்குள்ளான குறித்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை இடம்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like