பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு நீதிவான் கடும் எச்சரிக்கை!

சரியான சாட்சியங்கள் இல்லாமல் வெறும் சந்தேகத்தின்பேரில் ஐந்து பேரைக் கைது செய்து அலைக்கழித்த இரு பொலிஸ் பரீட்சகர்களுக்கு (இன்ஸ்பெக்டர்கள்) பாணந்துறை பிரதம நீதிவான் சமிந்த லியனகே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவர்கள் ஐவரும் பள்ளிவாசலொன்றின் மீதும், கடையொன்றின் மீதும் பெற்றோல் குண்டுகளை வீசினர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் எதுவும் பொலிஸாரால் முன்வைக்கப்படவில்லை.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென சட்டமா அதிபரும் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதனடிப்படையில் இவர்களைக் கைது செய்து வழக்கு தொடர்ந்திருந்த கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரீட்சகரான நெவில் டீ சில்வாவுக்கு பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸ் பரீட்சகரான துஷார டீ சில்வாவுக்கும் பகிரங்க நீதிமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் எவையேனும் இருப்பின் அவற்றை ஒக்டோபர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டுமென நேற்று உத்தரவிட்ட நீதிவான் சந்தேகநபர்களை அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

You might also like