முன்னாள் போராளிகள் தொடர்பில் அரசாங்கம் உள்நோக்கத்துடன் செயற்படுகிறது: த.தே.ம.முன்னணி

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்திப் பொலிஸ்மா அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறு தொடர்புபடுத்துவதில் ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்குவில்பகுதியில் கோப்பாய்ப் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இரு இளைஞர்களும் முன்னாள் போராளிகள் எனப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், குறித்த இளைஞர்களில் ஒருவருக்காக நீதிமன்றத்தில்ஆஜரான சட்டத்தரணி சுகாஸ் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள இரு இளைஞர்களில் எவருமே முன்னாள் போராளியல்ல எனத் தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறாயின் பொலிஸ்மா அதிபர் பொய் கூறியிருக்கின்றார் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. கொக்குவில் வாள்வெட்டுச் சம்பவத்துடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்தியிருப்பது திட்டமிட்ட, அரசாங்கத்தினால் சோடிக்கப்பட்டதொரு நடவடிக்கை எனத் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த- 24 ஆம் திகதி ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கித் தீர்ப்பளித்துள்ளது.

யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் கடந்தஏழு ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான சான்றாதாரங்களும் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டு இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில் தடை சில தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடைகள் நீடிக்கப்பட்டமையும் வெறும் அறிக்கைகளை மாத்திரம் அடிப்படையாக வைத்துத் தான் நீடிக்கப்பட்டதே தவிர இக்காலப்பகுதிக்குள் தமீழீழ விடுதலைப் புலிகள் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான சான்றாதாரங்களுமில்லை என நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது தொடர்பில் இழுபறி நிலையிலுள்ளது.

ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு அரசியல் ரீதியானதாகவேயுள்ளது. இந்த நிலையில் அரசியல் ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கச் செய்வதற்கான ஒரு உபாயமாக இலங்கை அரசாங்கம் அண்மைய நாட்களில் வன்முறைகளை யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது.

வன்முறைச் செயற்பாடுகளில் முன்னாள் போராளிகளைச் சம்பந்தப்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகள் இன்னமும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது தான் இந்தச் செயற்பாட்டின் முக்கிய பின்புலம் ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில் அந்தத் தீர்ப்பையும் மீறி அரசியல் காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் அந்தத் தடையைத் தொடர்ந்தும் நீடிக்கச் செய்வதற்கான சதி முயற்சியாகவே யாழ்.வன்முறைச் சம்பவங்கள் காணப்படுகின்றன.

அவ்வாறு தடையை நீடிப்பது ஒட்டுமொத்தமான தமிழ் மக்களையும் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள் வைத்திருக்கவும், தமிழ் மக்கள் தங்கள் நியாயமான அரசியல் கோரிக்கைகளை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கு முடியாத நிலமையைத் தொடர்ந்தும் ஏற்படுத்துவதற்கும்,

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒற்றுமையாக அணி திரண்டு தாயகத்திலுள்ள பாதிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு உதவுவதற்கு முன்வராத சூழலை உருவாக்குவதற்கும், நீண்டகால அரசியல் கோரிக்கைகள் ஓரணியில் ஒன்று திரண்டு குரல் கொடுக்க முடியாதவாறான அச்சநிலையை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்படும் சூழலில் புலம்பெயர் மண்ணில் செல்வாக்குச் செலுத்துகின்ற புலம்பெயர் அமைப்புக்கள் வெளிவந்து சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒரு சில அமைப்புக்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்கள் தான் தமிழர்களுடைய குரல் என்று சொல்லக் கூடியவாறான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றதா? எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ஒரு நாட்டின் பொலிஸ்மா அதிபரே உண்மையற்ற பொய்யான கருத்துக்களை வெளியிடுகிறார் எனில் இவர்களுக்குள் யார் நேர்மையானவர்களாகக் காணப்படுவார்கள்? என்ற கேள்வி எழுகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like