கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயம்

கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பேருந்து இன்று அதிகாலை 3.20 மணியளவில் கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் வளாகத்திற்குள் மின்சார கம்பங்கள் மீதும் அருகில் இருந்து கடைத்தொகுதிகள் மீதும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த விபத்து சாரதியின் நித்திரையினாலோ அல்லது அதிக வேகத்தினாலோ இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு சாரதி உட்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like